“வார்த்தைகளை அவதானமாகப் பேசுங்கள்.. மனிதகுல வரலாற்றில் பொருளாதாரப் போர்கள் பெரும்பாலும் உண்மையான போர்களாக மாறியுள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்”.
-இவ்வாறு ரஷ்யாவின் ஐ.நா.அதிகாரி ஒருவர் பிரான்ஸின் நிதி அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
நிதி அமைச்சர் புருனோ லு மேயர் ‘பிரான்ஸ் இன்ஃபோ’ செய்திச் சேவையின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்றுக் காலை கலந்துகொண்டார்.
“நாங்கள் ரஷ்யா மீது ஒட்டுமொத்தமான பொருளாதார மற்றும் நிதிப் போரை நடத்தவிருக்கிறோம்” என்று எச்சரித்த அவர் “போர்” என்ற சொல்லைப் பயன் படுத்தியிருந்தார்.
ரஷ்யாவுக்கு எதிரான “போர்” என்ற அவ ரது வார்த்தை உடனடியாகவே மொஸ்கோவில் எதிரொலித்தது. ஐ.நா.பாதுகாப்புச் சபையின் ரஷ்யாவுக்கான உப தலைவர் திமித்ரி மெட்வெடேவ் (Dmitri Medvedev) உடனேயே அதற்குப் பதிலளிக்கும் வகையில் ருவீற்றர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
“மனிதகுல வரலாற்றில் பொருளாதாரப் போர்கள் பெரும்பாலும் உண்மையான போர்களாக மாறியுள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்..வார்த்தைகளை அவதானமாகப் பேசுங்கள் ” – என்று அவர் அங்கிருந்து விடுத்த எச்சரிக்கை மீண்டும் பாரிஸில் எதிரொலித்திருக்கிறது.
ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் போர் தொடுக்கவில்லை.”போர்” என்று நான் பயன்படுத்திய சொல் பொருத்தமற்றது, பதற்றத்தைத் தணிப்பதற்கு உதவாது. எனவே அதற்காக வருத்தத்தைத் தெரி வித்துக் கொள்கிறேன் – என்று தனது வார்த்தையைத் திருத்திக் கொண்டார் பிரெஞ்சு அமைச்சர் புருனோ லு மேயர்.
இந்த நெருக்கடியில் உக்ரைன் மக்களுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம். அதேசமயம் ரஷ்யாவிற்கு எதிராகப் பரந்துபட்ட மற்றும் தீவிரமான பொருளாதாரத் தடைகளை விதிக்க நாங்கள் உறுதியாக உள்ளோம், ஆனால் ரஷ்ய மக்களுடன் நாங்கள் மோதவில்லை – என்று அவர் ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தினார்.
மேற்கு நாடுகள் கூட்டாக மொஸ்கோ மீது விதித்துவரும் தடைகள் அந்நாட்டின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக உலுக்கியிருக்கின்றன.
அங்கு இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் திவாலாகும் நிலையைத் தவிர்ப்பதற்காக அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளன
Discussion about this post