மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே, காலிமுகத்திடல் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாது போனது என்று தேசபந்து தென்னகோன் வாக்குமூலமளித்துள்ளார் என்று அறிய முடிகின்றது.
கொழும்பு மத்திய பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி, வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதேவேளை, மைனாகோகம மற்றும் கோட்டாகோகம மீதான தாக்குதல் தொடர்பில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் நேற்று ஆலோசனை வழங்கினார்.
இதனிடையே, கோட்டாகோகம மற்றும் மற்றும் மைனாகோகம மீதான தாக்குதல் தொடர்பில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டுமென குற்றப்புலனாய்வு திணைக்களம் சபாநாயகரிடம் அறிவித்துள்ளது.
Discussion about this post