பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
“வற்” எனப்படும் பெறுமதிசேர் வரி திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றில் நேற்று முன்வைக்கப்பட்டது. பெறுமதிசேர் வரிச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
பாதீட்டின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவதற்காகவும், 2021ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவும் இந்தச் சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு பெறுமதி சேர் வரியானது 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
ஏதேனும், தொற்றுநோய் சூழல் அல்லது மக்களுக்கான அவசர சூழலின் போது அரசாங்க மருத்துவமனைகள், சுகாதார அமைச்சு ஆகியனவற்றுக்கு வழங்கப்படும் மருத்துவ உபகரணங்கள், மற்றும் ஒளடத நன்கொடைகளுக்கு மாத்திரம் பெறுமதி சேர் வரி விலக்களிப்பு செய்யப்படவுள்ளது.
நாட்டில் வரி வசூலிப்பில் அதிகரிப்பு அல்லது குறைப்புச் செய்வதாயின் அது தொடர்பாக பொருளாதார மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் நிலைப்பாடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post