தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் வருடத்திற்கு நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.மொனராகலையில் நேற்றையதினம் (14) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு, சுற்றுலாத்துறை, மீன்பிடி கைத்தொழில், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் விவசாயத் துறை போன்ற பகுதிகள் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான உடனடி நடவடிக்கைகளாக அபிவிருத்தி செய்யக்கூடிய பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான உடனடி நடவடிக்கையாக சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியும்.
இலங்கைக்கு ஒரு வருடத்திற்குள் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.3 மில்லியன் மட்டுமே. வருடத்திற்கு நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தொழில்துறையை மேம்படுத்துவோம்.
இந்திய – சீன பயணிகள்
இந்தியாவிலும், சீனாவிலும் 400 மில்லியன் நடுத்தர சுற்றுலான பயணிகள் இருக்கின்றனர், அதில் 120 மில்லியன் பயணிகள் வருடத்திற்கு சுற்றலாவிற்காக நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இலங்கை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. எங்களிடம் சிறந்த கடற்கரைகள், மத்திய மலைகள், வனவிலங்கு மண்டலங்கள், சிறந்த நாகரிகம் மற்றும் சுற்றுலாவிற்கு ஏற்ற பழங்கால மரபுகள் உள்ளன.” என்றார்.
Discussion about this post