தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் உட்படப் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று குழப்ப நிலைமை காணப்பட்டது.
பெற்றோல் நிரப்புவதற்காக அரச உத்தியோகத்தர்களும், சாதாரண மக்களும் தனித்தனி வரிசைகளில் காத்திருந்த நிலையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த முரண்பாடுகளால் யாழ்ப்பாணத்தில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றுப் பெற்றோல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டது.
பெற்றோல் மற்றும் டீசலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை வரையில் மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆயினும் நாடு முழுவதும் எரிபொருளுக்கு மக்கள் நீண்ட வரிசைகளில் நேற்றும் காத்திருந்தனர். எரிபொருள் வரிசைகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகச் சிலர் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post