வடமாகாணத்திற்கு கூட்டுறவு சங்கங்களிற்கு அனுப்பப்பட்ட 80 ஆயிரம் கிலோ சீனி யில் 30 ஆயிரம் கிலோ சீனி தரமற்றவையாக காணப்பட்ட நிலையில் அவை திரும்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கில் 320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண மக்களிற்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்க அமைச்சர் கடற்தொழில் அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் சீனியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 280 ரூபாவிற்கு மக்களிற்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து சீனியின் தாராதரம் பார்வையிடப்பட்ட பின்னர் வடக்கிற்கு குறித்த நிறுவனத்தால் 80 ஆயிரம் கிலோ சீனி அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தரமற்ற சீனியாக அடையாளம் காணப்பட்ட 30 ஆயிரம் கிலோ சீனி அந்த நிறுவனத்திடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்,
பொதுமக்களிற்கு தரமான பொருட்கள் மாத்திரமே வழங்கப்படும். கூட்டுறவு சங்கத்தினர் தரமற்ற சீனியை திருப்பி அனுப்பியது நல்ல விடயம். இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட நிறுவத்துடன் பேசப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட சீனிக்கு பதிலாக தரமான சீனி வழங்கப்படும் என்றார்.
Discussion about this post