திருகோணமலை, காங்கேசன்துறை, பலாலி விமான நிலையம் ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் ஒன்று வேண்டும் என வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அங்கு மேலும் தெரிவித்த அவர்,
“ இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் செய்த அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். அதிபரின் இந்திய விஜயத்தை தொடர்ந்து திருகோணமலை, காங்கேசன்துறை, பலாலி விமான நிலையம் ஆகியனவற்றை இந்தியாவுக்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன
நாடாளுமன்றத்தில் உள்ள தெரிவுக்குழுக்களில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கப்படாததால் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்ப எமக்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் ஒன்று வேண்டும். நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர்கள் எவரும் பங்குபற்றுவதில்லை.
நாட்டில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதாக அதிபர் கூறுகின்றார். ஆனால் இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து இதுவரை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வில்லை” என்றார்.
Discussion about this post