வடக்கில் யுத்த காலங்களில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்றளவிலும் மக்களுக்கு வழங்கப்படாதுள்ளது.
இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டுமாயின் காணி உரிமைகளை மீளவும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில்,
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பொறுப்பு கூற வேண்டும்.
யுத்த காலங்களில் வடக்கு மக்கள் எதிர்நோக்கிய இன்னல்களை பொருளாதார நெருக்கடி காரணமாக முழு நாட்டு மக்களும் இன்று எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
நாட்டில் சட்டம் சீர்குலைந்துள்ளது. அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன . நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் மக்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மீண்டும் நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்தி இந்த சட்டத்தின் மூலம் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுகின்ற சங்கங்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களை பயங்கரவாதிகள் போல் கைது செய்து காலவரையின்றி தடுத்து வைத்துள்ளார்கள்.
வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் இந்த அரசாங்கம் அரசியல் கைதிகளை உருவாக்குகிறது. 13 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வடகிழக்கு எதிர்நோக்கிய அரசியல் பிரச்சினைகள் இன்று முழு நாடும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கிற்கு தனியாக தீர்வு அல்லாது வடக்கு தெற்கு என்று பேதமின்றி அனைவரும் ஒன்றினைந்து மோசடியான ஆட்சியாளர்களிடமிருந்து விடுபட்டு அனைவரும் அவர்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
அதுமட்டுமல்லாது வடக்கு மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொடுக்க வேண்டி இருக்கிறது. விசேடமாக காணி உரிமை விடயம்.
குறிப்பாக யுத்தகாலத்தில் இராணுவம் வருகை தந்து இங்கிருந்த காணிகளை கைப்பற்றினார்கள்.இந்த காணிகள் இன்றளவிலும் மக்களுக்கு மீள வழங்கப்படவில்லை.
இருப்பினும் காணிகள் வழங்கப்படாது மேலும் காணிகளை அபகரிக்கும் செய்றபாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமாயின் காணி உரிமைகளை மக்களும் மீள வழங்க வேண்டும் என்றார்.
Discussion about this post