நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை, றம்போடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு வவுனியாவைச் சேர்ந்த மூவர் காணாமல் போயிருந்த நிலையில், 21 வயது யுவதியின் உடல் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வவுனியா, கல்மடு, ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை மதுசாலினி (வயது-21) என்ற யுவதியின் சடலமே நேற்று மீட்கப்பட்டிருக்கின்றது. வவுனியா, நெடுங்கேணியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதினி (வயது-18), வவுனியாவைச் சேர்ந்த விதுசன் (வயது-21) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் 48 பேர் பஸ் ஒன்றில் நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்றபோதே இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
சுற்றுலா சென்றவர்கள் குழுக்களாக றம்போடை நீர்வீழ்ச்சியில் இறங்கி ஒளிப்படங்கள் எடுத்த சந்தர்ப்பத்தில், நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து 7 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அங்கிருந்தவர்கள் நால்வரை காப்பாற்றிக் கரைசேர்த்தபோதும், இரு யுவதிகளும், ஒரு இளைஞரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
காணாமல் போயிருந்த யுவதிகளில் ஒருவரின் உடல் கற்பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த நிலையில் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, தற்போது நாட்டிலுள்ள நீர்வீழ்ச்சிகள், ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்ந்துள்ளன. பல இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் நீரோட்டங்களின் வேகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அவ்வாறான இடங்களுக்குச் செல்வோர், அங்குள்ள அறிவுத்தல்களை அவதானித்துச் செயற்பட வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post