மியான்மாரில் ரொஹிங்கியாக்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதத்தின் குற்றங்களை இனப்படுகொலை என்று அமெரிக்க இராஜாங்க செயலர் பிளிங்களின் அங்கீகரித்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது.
நீதிக்காக போராடும் ஈழத்தமிழ் மக்களாகிய நாங்களும் ஒருமைப்பாட்டுடன் ரொஹிங்கியா மக்களின் கரங்களைப் பற்றிக் கொள்கின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் தொகையான அட்டூழியத் தடுப்பிற்கான அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
மியான்மார் இராணுவம் ரொஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைத்த சர்வதேச குற்றங்களை இனப்படுகொலை என்று, கடந்த மார்ச் 21, 2022 அன்று அமெரிக்க இராஜாங்க செயலர் பிளிங்கன் அறிவித்திருந்தார்.
‘இந்த அறிவிப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. இனப்படுகொலைக்கு ஆளாகி, நீதிக்காக ஏங்கும் ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள், ஒருமைப்பாட்டுடன் ரொஹிங்கியா மக்களின் கரங்களைப் பற்றி, இந்த நீதிக்காக அவர்களை வாழ்த்துகிறோம்’ என இனப்படுகொலை மற்றும் தொகையான அட்டூழியத் தடுப்புக்கான அமைச்சர் திரு.றோய் விக்னராஜா தெரிவித்துள்ளார்.
கனடா, பிரான்ஸ், துருக்கி மற்றும் பிற நாடுகள் ரொஹிங்கியா மக்களுக்கு எதிரான குற்றங்களை இனப்படுகொலை என்று ஏற்கனவே அறிவித்துள்ளன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஜன.20, 2021 அன்று வீகர் இனப்படுகொலை, மற்றும் ஏப்ரல் 24, 2021 அன்று ஆர்மேனிய இனப்படுகொலை, அகியவற்றை அங்கீகரித்தமையானது, ‘பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது’, பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது என்ற போர்வையில் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் ஆகியவற்றைப் புரியும் அரசுகளையும், தனி நபர்களையும் நீதியின் முன் நிறத்துவதிலும் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதிலும் அமெரிக்க நிர்வாகத்திற்கு இருக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்குச் சான்றாக இது அமைந்துள்ளது.
இப்படியானதொரு போர்வையில் தான், மியான்மார் பௌத்த பேரினவாத இராணுவ ஆட்சியாளாகளும், ‘சட்டபூர்வமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்’ எனற பேர்வையில் தமது சர்வதேச குற்றங்களை நியாயப்படுத்துகின்றனர்.
ரொஹிங்கியா இனப்படுகொலையை அங்கீகரிக்கையில், ‘எண்ணிக்கை, சதவீதம், வடிவம், நோக்கம் – ஆகியன இனப்படுகொலயை நிர்ணயம் செய்வதற்கு மிகவும் முக்கியமானவை’ என்று இராஜாங்கச் செயலர் கூறியுள்ளார்.
2009ம் ஆண்டு இலங்கைத்தீவில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனஅழிப்பின் போது சிறிலங்கா இராணுவத்தின் கைகளில் 40,0001 – 70,0002க்கும் மேற்பட்ட எமது உறவுகளை இழந்துள்ள ஈழத் தமிழர்களாகிய நாங்கள், இராஜாங்க செயலரின் அறிக்கையில், அத்தகைய நிர்ணயத்தை எட்டுவதற்காக எடுத்துக் கொண்டுள்ள கூறுகள் பற்றிய குறிப்பினை மிகுந்த கவனத்தில் எடுத்துள்ளோம்.
ரொஹிங்கியாக்கள் கொல்லப்பட்டது, பாலியல் வன்புணர்வு மற்றும் இடம்பெயர்வுகள் ஒரு இனப்படுகொலை என்று பிரகடனப்படுத்திய இராஜாங்க செயலரின் உரையில், உக்ரைன் மக்களின் துன்பங்களைப் பற்றிக் குறிப்பிட்டு, ‘ஆம், நாங்கள் உக்ரைன் மக்களுடன் நிற்கிறோம் என உலகெங்கிலும் உள்ள பல இராஜதந்திரிகள் கூறுகின்றனா், ஆனாலும் மற்றைய இடங்களிலும் அட்டூழியங்களால் பாதிக்கப்படும் மக்களுடன் நாங்கள் நிற்க வேண்டும்.’ எனவும் கூறியிருந்தார்.
உக்ரேனிய மக்களின் துன்பங்கள் உலகின் பல பகுதிகளிலும் மற்ற மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களை மறைத்துவிடும் என்ற அச்சத்தை இராஜாங்கச் செயலரின் இக் கருத்து நீக்குகிறது.
தொடர்ச்சியாகத் தண்டனையின்மையை அனுபவித்து வரும் துணிவினால்; இலங்கைத் தீவில், தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில், தமிழ் அடையாளத்தை அழிக்கும் நோக்குடன் தமிழர்கள் மீதான திட்டமிட்ட மற்றும் பரவலான அடக்குமுறையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு தொடர்ந்தும் ஈடுபடுவது, தண்டிக்கப்படாமற் போகாது என்பதனை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
மியான்மாரில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்குத் தொடரக்கூடிய ஆதாரங்களைத் திரட்டும் ஐக்கிய நாடுகளின் புலன் விசாரணை அமைப்புக்கு ஏறத்தாள 1 மில்லியன் டொலர்களைப் புதிய நிதியுதவியாக அமெரிக்கா அளிக்கும் என்றும் இராஜாங்கச் செயலர் கூறியுள்ளார்.
2021ம் ஆண்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்திற்கு இணங்க, இலங்கைத்தீவிலன் இறுதிக்கட்ட போரின் போது இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு சாட்சியங்களை சேகரிப்பதற்குப் பணிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும், இதேபோன்ற நிதியை வழங்குமாறு இராஜாங்க செயலரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகிறது.
இடையீடுகள் வாயிலாகப் பெறப்பட்ட, சிறிலங்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு இடையிலான தொலைத்தொடர்புகள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும், தமிழர்களுக்கான பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்காக, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குரைஞர்களிடம் வெளியிடுமாறும் நாங்கள் இராஜாங்க செயலரைக் கேட்டுக் கொள்கிறோம்.
சிவில் சமூகத்தையும், குறிப்பாக 2018ம் ஆண்டு முதல் பொறுப்புக்கூறலுக்காக, ரொஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள்; இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்று முடிவெடுக்க சட்டப்பூர்வ அடிப்படை உள்ளது என்று வாதிட்டு வரும், பொதுச் சர்வதேச சட்டம் மற்றும் கொள்கைக்கான குழுமத்தையும் நாங்கள் வாழ்த்துகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் தொகையான அட்டூழியத் தடுப்பிற்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post