வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ஆகியோர் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் செய்மதி உருவாக்கத்திற்கு உதவி வழங்குவதாக கிம் ஜோங் உன்னிடம் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உறுதி வழங்கியுள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு பேரவையின் தடைகளுக்கு உள்ளாகி, தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன், ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
கிம் ஜோன் உன்னுடன் கொரிய மக்கள் இராணுவத்தின் கட்டளைத் தளபதி, அடுத்த நிலையில் உள்ள இரண்டு இராணுவ தலைமை அதிகாரி, வடகொரிய வெடிமருந்து தொழில்துறை திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டவர்களும் ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
அத்துடன் வடகொரியாவின் செல்வாக்குமிக்க கிம் ஜோங் உன்னின் சகோதரியான கிம் ஜோ ஜோங்கும் ரஷ்யாவிற்கான பயணத்தில் இணைந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை சந்தித்து பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து வடகொரிய அதிபர் கலந்துரையாடியுள்ளார்.
ரஷ்ய அதிபரின் தீர்மானங்களுக்கு எப்போதும் ஆதரவு வழங்குவோம் எனவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் எனவும் கிம் ஜோன் உன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, செய்திமதியை தயாரிக்கும் வடகொரியாவின் முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இரண்டு தடவைகள் செய்மதியை விண்ணுக்கு செலுத்தும் வடகொரியாவின் முயற்சிகள் தோல்வி அடைந்த பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனிடையே இரண்டு நாடுகளுக்கு இடையில் ஆயுத உடன்படிக்கையும் இறுதிப்படுத்தப்படலாம் என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.
மறுபுறம் வடகொரியா, இரண்டு ஏவுகணைகளை நேற்று ஏவியுள்ளது. முதல் முறையாக கிம் ஜோங் உன், நாட்டில் இல்லாத நிலையில், இவ்வாறு ஏவுகணையை வடகொரியா செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post