தருமபுரியில் சவுமியா அன்புமணியும் விருதுநகரில் விஜய பிரபாகரனும் வெல்வார்கள் என்று தனக்கு தெரிந்த ஜோதிடர் கூறியதாக எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள்
தமிழகம் மற்றும் புதுவையில் 40 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 -ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
இதில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவிருக்கிறது. 7 கட்ட தேர்தல்களும் முடிவடைந்த நிலையில், பெரும்பாலான டிவி சேனல்கள் கருத்துக்கணிப்பு நடத்தியது.
அந்தவகையில், தனியார் சேனல் நடத்திய கருத்துக்கணிப்பின் படி, கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கே வெற்றி கிடைக்கும் என்றும், அண்ணாமலை 3 -வது இடத்தில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு 34% வாக்குகளும் பாமக வேட்பாளர் சவுமியாவுக்கு 32% வாக்குகளும், அதிமுகவுக்கு 26 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விருதுநகரில், காங்கிரஸுக்கு 36 % வாக்குகளும், தேமுதிகவுக்கு 27% வாக்குகளும் , பாஜகவுக்கு 21% வாக்குகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், விஜயகாந்த் மறைவுக்கு பிறகு விஜய பிரபாகரனுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். ஆனால், அவருக்கு வெற்றி கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
எஸ்.வி.சேகரின் ஜோதிடர்
இந்நிலையில், நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், “எல்லோரும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ள வேளையில் ஒரு வாரம் முன்பு எந்தக்கட்சியையும் சாராத என் நெருங்கிய ஜோதிடர் கணித்துள்ள தமிழ் நாட்டின் கருத்துக்கணிப்பை வெளியிடுகிறேன்.
இதில் உள்ளபடியே நடந்தால், ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்க்கு அவரை அறிமுகப்படுத்துகிறேன்” என்று கூறி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அதில், தருமபுரியில் சவுமியா அன்புமணியும் விருதுநகரில் விஜய பிரபாகரனும் வெற்றி பெறுவார்கள் என அந்த ஜோதிடர் கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்
Discussion about this post