வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதைத் தவிர்ப்பதால் ராஜபக்சக்கள் பாதிக்கப்பட போவதில்லை, சாதாரண நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள்.
அதனால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வங்கிக் கட்டமைப்பின் ஊடாக நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டும். அதேநேரம், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள ஏன் அவதானம் செலுத்தவில்லை என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு நாடாளுளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு கம்யூனிச கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள வேளையில் மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் நேரில் வரியை அதிகரித்துள்ளது.
வரி அறவிடல் ஊடக 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் 24 சதவீதமாக காணப்பட்ட தேசிய வரி வருமானம் 2021ஆம் ஆண்டு 08 சதவீதமாக காணப்படுகிறது.
நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் நேர் வரியுடன், நேரில் வரியையும் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கம் நேரில் வரி அறவிடலில் சற்று தளர்வான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பல்வேறு காரணிகளினால் இலங்கைக்கு டொலர் அனுப்புவதை தவிர்த்து வருகிறார்கள். டொலர் அனுப்பாவிடின் அதனால் ராஜபக்சக்கள் பாதிக்கப்பட போவதில்லை.
சாதாரண நடுத்தர மக்களே மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்க்கொள்வார்கள். அதனால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தமது உறவுகளுக்காக வங்கி கட்டமைப்பின் ஊடாக டொலர் அனுப்ப வேண்டும்.
உக்ரேன் – ரஷ்யா மோதலை தொடர்ந்து பெரும்லான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்முதலை தவிர்த்து வருவதை ஆசிய நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன.
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்யும் சாத்தியம் காணப்படும் பட்சத்தில் அது தொடர்பாக இதுவரை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
அரசமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் தற்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன. திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசமைப்பு சார்ந்த ஒருசில விடயங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றார்.
Discussion about this post