ரயிலினுள் தம்பதியை வாள்முனையில் அச்சுறுத்தி 2 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றையவர் தப்பிச்சென்றுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு கோட்டையில் இருந்து வாதுவ நோக்கி பயணித்த ரயிலில் கடந்த புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மன்னாரிலிருந்து மொரட்டுவவுக்கு ரயிலில் பயணித்த தம்பதியின் தங்கச்சங்கிலியே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
ரயிலினுள் வாள்களுடன் ஏறிய இருவர் மனைவியை அச்சுறுத்தி அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி அபகரித்து ரயிலிலிருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மொரட்டுவ பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது ரயிலிலிருந்து குதித்த சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் தண்டவாளத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றையவர் கொள்ளையடிக்கப்பட்ட நகையுடன் தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post