ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின், கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக இன்று முற்பகல் முற்றுகைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“ராஜபக்ச அரசுடன், ரணிலுக்கு டீல் உள்ளது. அவர்தான் அரசை பாதுகாக்கின்றார். எனவே, ரணிலும் வீடு செல்ல வேண்டும்.” என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியதுடன், பதாகைகளையும் காட்சிப்படுத்தினர்.
தனது வீட்டை சுற்றிவளைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் செயற்படுபவர்களில் சாணக்கியனும் ஒருவர் என ரணில் விக்கிரமசிங்க சபையில் நேற்று தெரிவித்திருந்தார்.
இதனால் ரணிலின் வீடு அமைந்துள்ள பகுதியில் நேற்று மாலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மறுபுறத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்ற நிலையும் உருவானது.
அதேவேளை, தன்னுடன் பேச்சு நடத்த திங்களன்று கட்சி தலைமையகம் வருமாறு, போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
Discussion about this post