நேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டமைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கண்டனம் தெரிவித்துள்ளார். அதேநேரம் நோர்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் கவலை வெளியிட்டுள்ளன.
பிரதமரின் இல்லத்துக்கு தீ வைக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். அதேவேளை, பிரதமர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பத்துக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தனது டுவீற்றர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
ஒரு மோசமான அரசாங்கத்தை விரட்டி, மக்கள் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான இலக்கை அடைய போராட்டக்காரர்களுக்கு வன்முறை தேவையில்லை.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘அறவழிப் போராட்டத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை பின்னடையச் செய்யும் வகையிலான தீ வைப்பு, கொள்ளையிடுதல் போன்ற வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம’ என்று ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேசமும் கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் தனது டுவிற்றர் பதிவில் , ‘அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாறி, பிரதமர் இல்லம் எரிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.
எந்தச் சூழலிலும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது. வன்முறை விரிவடைவதைத் தடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம். போராட்டக்காரர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘வன்முறை , பொது மற்றும் தனியார் சொத்துக்களை அழிப்பது நியாயமற்றது. இலங்கையில் இதுபோன்று பொது ஒழுங்கை மீறுவது நாட்டின் பிரச்சினைகளை ஆழமாக்குகிறது. இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை பாதிக்கிறது.
தேசிய ஒற்றுமை மற்றும் சர்வதேச உதவி மூலம் மட்டுமே தீர்வுகள் கிடைக்கும் ‘ என ஆப்கானிஸ்தான் தூதுவர் டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Discussion about this post