மேற்குலக நாடுகளுடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு, நல்லுறவு கிடையாது, எனவே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பயன்படுத்திவருகின்றது.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியல் மேடைகளிலும், ஊடாக சந்திப்புகளின்போதும் அவ்வப்போது பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவது எஸ்.பி.க்கு கைவந்தகலை.
இந்நிலையிலேயே ” ஜனாதிபதி ரணிலை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஒரு கருவியாக பயன்படுத்துகின்றது.” – என்ற தொனியில் எஸ்.பி. கருத்து வெளியிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு இன்று (09) நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட எஸ்.பி. திஸாநாயக்க,
” மத்திய வங்கி கொள்ளை (பிணைமுறி மோசடி), உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட காரணங்களாலேயே நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.” – என சுட்டிக்காட்டினார்.
அவ்வேளையில், ” மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. எனினும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்துதான் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இப்பயணம் தொடரும் என கருதுகின்றீர்களா.” – என எஸ்.பி. திஸாநாயக்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர்,
” ஓரளவு முடியும், ரணில் விக்கிரமசிங்க என்பவர் எமது கட்சி தலைவர் அல்லர், மஹிந்த ராஜபக்சவே எமது தலைவர், கட்சியின் ஸ்தாபகத் தலைவர்தான் பஸில் ராஜபக்ச. அதேபோல மொட்டு கட்சி தனியானதொரு கட்சியாகும்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்பு தேவைப்படுகின்றது. ஏனெனில் எவ்வாறுதான் பேச்சுகளை முன்னெடுத்தாலும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன இறுதியில் அமெரிக்கா பக்கமே நிற்கும், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் எமது கட்சிக்கு நட்புறவு கிடையாது. ஆனால், மேற்படி நாடுகளுடன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறந்த நட்பு உள்ளது. அந்த வாய்ப்பை நாம் (மொட்டு கட்சி) பயன்படுத்திக்கொள்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் மேற்குலகுடன் சிறந்த முறையில் ரணில் விக்கிரமசிங்கவால் செயற்பட முடியும். எனவேதான் அவர்மீது நம்பிக்கை வைத்து, அதிகாரத்தை அவருக்கு வழங்கியது. எது எப்படி நாடாளுமன்றத்தில் எமது கட்சிக்குதான் பெரும்பான்மை பலம் உள்ளது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.
Discussion about this post