பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச என்னிடம் கோரிக்கை விடுத்தார். நான் அதை ஏற்கவில்லை. அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிட்டியது. என்னால்தான், உங்களுக்கு பிரதமர் கதிரை கிடைத்தது என்பதை மறந்துவிட வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிண்டல் பாணியில் என்னை பற்றியும் கருத்து வெளியிட்டிருந்தார். அரசியல் வாய்ப்பை அவரே வழங்கினார் என்று கூறினார்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளரைத் தேடி அழைத்தனர். நான் எனது கழுத்தை வைத்தேன் என்பதை மறந்துவிட வேண்டாம்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, உங்களை (ரணில்) அழைப்பதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னர் என்னை அழைத்து பேச்சு நடத்தினார். பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நான் 4 நிபந்தனைகளை முன்வைத்தேன். எனது கட்சியின் பெரும்பான்மை அனுமதி கிடைத்தால் மாத்திரம் அதைச் செய்வேன் என்று கூறியிருந்தேன்.
இதனால்தான் ரணிலுக்கு வாய்ப்பு கிடைத்தது. மக்கள் போராட்டம் முடிந்துவிட்டது என சிலர் நினைக்கின்றனர். அவ்வாறு இல்லை. மக்கள் அதிருப்தியிலேயே உள்ளனர் என்றார்.
Discussion about this post