புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு நீக்கியமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்களையும் கறுப்புப்பட்டியலில் இருந்து இலங்கை அரசு நீக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிபந்தனைகளின் 1373 இன் கீழ், இலங்கைக்குள் 18 அமைப்புக்களுக்கும், 577 தனிநபர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தடை விதித்தது.
இந்நிலையில், இலங்கைக்குள் தடைசெய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய 6 அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும் நீக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர்,
“இது நல்லதொரு விடயம். அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றோம். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் மீள் எழுச்சிக்குப் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியம். இதனை உணர்ந்து சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும், தனிநபர்களினதும் தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.
நாட்டின் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை வரவேற்கின்றோம். அதேவேளை, தொடர்ந்தும் தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பிலும் ரணில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
புலம்பெயர் தமிழர்களுடன் இலங்கை அரசு நெருக்கமாகப் பேசி நாட்டுக்காக அவர்களின் உதவிகளைப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ரணில் அரசு வழங்க முன்வந்தால்தான் அவர்கள் எதிர்பார்க்கின்ற புலம்பெயர் தமிழர்களுடைய முதலீடுகளும், பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான உதவிகளும் கிடைக்கும் என்று கருத வேண்டும்.
அதேவேளை, ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது தொடரும் தடையையும் நீக்க ரணில் அரசு முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
Discussion about this post