தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
கம்பீரமாய் காட்சியளிக்கும் யாழ். நூலகத்தின் கருகிய புத்தகங்களின் சாம்பர் மணத்தை, வாசிப்பின் மீது தீராத காதல் கொண்ட வாசகர்களால் மாத்திரமே நுகரமுடியும்.
அறியாமை இருளகற்றும் புத்தொளிக் கீற்றை இன்று போன்றதோர் நாளில் , காரிருளில் மூழ்கடித்த கதையை மீட்ட மீட்ட சோகமே எஞ்சும்.
கவர்ந்து செல்லவோ சூறையாடவோ முடியாத தென்னாசியாவின் அறிவுப் பொக்கிஷத்தை தீது நன்கறியாத தீ தீண்டி துவம்சம் செய்த துன்பியல் அனுபவத்தை வார்த்தைகளில் வசப்படுத்துவது அவ்வளவு எளிதன்று.
1933 ஆம் ஆண்டு அறிவறம் நிரம்பிய சான்றோரின் வாசிப்பு விதை சில காலத்தில் பெருவிருட்சமாய் அறியாமை இருள்களையும்
யாழ். நூலகமாய் நிமிர்ந்து நின்றது.
1800 களில் யாழில் தகவல் தந்த செய்தி ஏடுகள், தொன்மைவாய்ந்த வரலாற்று ஆவணங்களை உள்ளடக்கி எம்மவரின் உணர்வுகளின் எழுத்துருவாய் யாழ். நூலகம் வீறுடன் விளங்கியது.
யாழ். நூலகத்தின் இருப்பின் அடையாளத்தை அரிக்கும் கறையான்கள், பழம்பெருமையை அழிக்க தீ வடிவம் கொண்டு யாழ். நூலகத்தை பற்றின.
1981 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு வேளை, தென்னாசியாவின் அறிவுக் களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்க ஆரம்பித்தன.
நூலகம் எரியூட்பட்ட வேளை, இரவல் வழங்கும் பகுதியில் சுமார் 57,000 நூல்களும் சிறுவர் பகுதியில் 8,995 நூல்களும் உசாத்துணை பகுதியில் கிடைத்தற்கரிய 29,500 நூல்களும் இருந்தன.
இவை அனைத்தும் தீயினால் சிதைக்கப்பட்டு, சாம்பராகியமை வேதனைக்குரியதே.
ஆண்டுகள் பல கடந்த நிலையில் இன்று..
காயங்களை ஆற்றும் காலம், நூலகத்தின் உருவை இன்று மாற்றியுள்ளது.
யாழ். பொது நூலகம் இன்று மீண்டும் கம்பீரமாக காட்சியளிப்பதுடன், வாசகர்களின் அறிவுப்பசியினை போக்கி வருகின்றது.
Discussion about this post