யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்படவுள்ளார் என்றும் இன்று அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது என்றும் நம்பகரமாக அறியமுடிகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளராக கீதநாத் காசிலிங்கம், வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்படுகின்றார்.
இந்தநிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக பல தரப்புக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், முறைப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் எல்லைமீறிச் செல்கின்றது என்றும், பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தடையாக இருக்கின்றது என்றும் பல தரப்புக்கள் குற்றஞ்சாட்டியிருந்தன.
அண்மையில் வலி.தெற்கு பிரதேச சபையிலும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரதும், அவர் சார் தரப்புக்களினதும் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப மக்களின் தேவைகளை நிர்ணயிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதேச சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தநிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கான பிரதமரின்பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்படவுள்ளார் என்று அறியமுடிந்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்று அறிய முடிகின்றது.
Discussion about this post