யாழ்ப்பாண – ஆனைப்பந்தியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கொத்து றொட்டி வாங்கிய ஒருவர்,
பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து றொட்டி காணப்படுவதாக கடந்த 09ம் திகதி பொது சுகாதார பரிசோதகர் ஆறுமுகதாசனிற்கு முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மாநகர பொது சுகாதார பரிசோதகர்கள் குழு குறித்த கடையினை பரிசோதித்தது.
குறித்த உணவகத்தில் பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்ட நிலையில் உணவகத்திற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆறுமுகதாசனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் கடை சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் (26) வழக்கு நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, உணவக உரிமையாளரிற்கு எதிராக சுமத்தப்பட்ட 09 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என இனங்கண்ட நீதிமன்றம் 45,000 ரூபாய் தண்டம் விதித்தது.
அத்துடன் கடையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கடையினை மீள திறக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Discussion about this post