யாழ்ப்பாணத்தில் போலி நாணத்தாள்களை அச்சிட்டு, அவற்றைப் புழக்கத்துக்கு விட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை, பன்னாலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் ஆலய சூழலில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை பயன்படுத்திய ஒருவர் சிலநாள்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருவர் யாழ்ப்பாணத்தில் அதேகுற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுகளில் உள்ள கடைகளுக்குச் சென்ற ஒருவர் 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வழங்கி பொருள்களை வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார். அந்த நாணயத்தாள் போலி என்பதை அறிந்த வர்த்தகர்கள் இருவர், இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட காங்கேசன்துறை பிராந்திய புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் 27 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Discussion about this post