யாழ் மாவட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்த மாதத்தின் ஆரம்பம் வரை 54 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக யாழ் மாவட்ட பொலிஸ் பிராந்திய அத்தியட்சகர் டபிள்யூ .ஏ.ஜகத் விசாந்த மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய அத்தியட்சகர் எம்.டபிள்யூ.சந்தனகமகே ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி கடந்த ஆண்டு 175 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததுடன், இவர்களில் 9 பேர் 18 வயதுக்குட்பட்டோராவார். 166 பேர் 18 வயதிற்கு மேற்பட்டோராக காணப்படுகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களில் காங்கேசன்துறைப் பொலிஸ் பிராந்தியத்தில் 116 பேரும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 59 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 பேர் 18 வயதுக்குட்பட்டோராகவும் 42 பேர் 18 வயதிற்கு மேற்பட்டோராகவும் காணப்படுகின்றனர். இதன்போது காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 39 பேரும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முற்பட்ட வேளை காப்பாற்றப்பட்டு சுமார் 50 பேர் வரையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்த ஆண்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முற்படுவது தண்டனைக்குரிய குற்றமென பொலிசார் சுட்டிக்காட்டுகின்றனர்.
Discussion about this post