யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கையை எதிர்த்து வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக இன்று (12) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், இன்று போராட்டம் இடம்பெற்ற நிலையில், அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள நில அளவைத் திணைக்களத்தினர் சமூகமளிக்கவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனன.
இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினர் அங்கு சமூகமளித்திருந்தனர்.
போராட்டம் முடிவடைந்த பின்னர் பிஸ்கட் மற்றும் குளிர்பானத்தை போராட்டக்காரர்களுக்கு வழங்க கடற்படையினர் முன்வந்த போதும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post