யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் இன்று முழுநேர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கம் மிக உச்சநிலையை அடைந்துள்ளது. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மட்டும் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 111 டெங்கு நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் யாழ்.மாவட்டத்தில் இம்மாதம் 18ஆம் திகதி வரை 886 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பூச்சியியல் ஆய்வுக்குழுவினர் யாழ்.மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் மிக அதிகமான டெங்கு பரவல் இருப்பதாகவும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் பெருகிக் காணப்படுவதாகவும் அடையாளம் கண்டுள்ளனர்.
குறிப்பாக வைத்தியசாலை வளாகங்கள், பாடசாலை வளாகங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அரசாங்க அலுவலகங்கள், அரசாங்க விடுதிகள், தனியார் கல்வி நிறுவன வளாகங்கள் போன்றவற்றில் டெங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் நுளம்புக்குடம்பிகள் பெருமளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் காணப்படும் இந்நிலைமை ஏனைய பிரதேசங்களுக்கும் வியாபித்து யாழ்.மாவட்டம் முழுவதும் டெங்கு தாக்கம் ஏறத்தாள அபாயகரமான நிலைமையை எட்டியுள்ளது.
எனவே யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் இன்று (21.12.2023) ஆம் திகதி முழுநேர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மேற்குறித்த அனைத்து வளாகங்களிலும் அங்கு கடமையாற்றுவோர் மற்றும் தங்கியிருப்போர் சிரமதானம் மூலம் நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்கள் மற்றும் கொள்கலன்களை அகற்றி அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வளாகங்களின் அளவை பொறுத்து சிரமதான நடவடிக்கைகள் தொடர்ந்து நாளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டு வளவுகளில் நீர் தேங்கி நிற்கக்கூடிய சகல கொள்கலன்களையும் அகற்றி டெங்கு நுளம்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேற்படி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அனைத்து அரசாங்க நிறுவனங்களும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களும் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Discussion about this post