யாழ்ப்பாணம் (Jaffna) – தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் ஒரு மாணவனுடைய பேனாவை சுவரில் எறிந்துள்ளனர்.
குறித்த பேனா உடைந்த நிலையில் காணப்பட்டதால் சம்பந்தப்பட்ட மாணவர்களை பொறுப்பாசிரியர் ஒருவர் விசாரணை செய்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன்
இந்நிலையில் அந்த ஆசிரியர் நடந்தவற்றை கூறுமாறு குறித்த மாணவனை கேட்டதற்கு, அங்கு நடந்த சம்பவத்தை மாணவன் தெரிவித்த நிலையில் அவரை இழுத்துச் சென்று கன்னத்தில் தாக்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
இது தொடர்பில் மாணவன் பெற்றோரிடம் முறையிட்ட நிலையில், தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவனுக்கு காது பகுதி வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காவல்துறையினர் நடவடிக்கை
குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, “பாதிக்கப்பட்ட மகன் நேற்று (27) யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.
மகனை தாக்கிய ஆசிரியர் இவ்வாறு பல மாணவர்களை பாடசாலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது வழமை.
எனது பிள்ளை கீழே இருந்த பேனாவை எடுத்து சென்ற நிலையில் பேனா எவ்வாறு உன்னிடம் வந்தது என கேட்டு, குறித்த ஆண் ஆசிரியர் சீருடையை பிடித்து இழுத்து அவரின் கன்னப் பகுதியை தாக்கியுள்ளதாக எனது மகன் தெரிவித்தார்“ என பெற்றோர் தெரிவித்தனர் .
ஆகவே தனது பிள்ளைக்கு இடம்பெற்ற சம்பவம் போல் இனி மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, குறித்த ஆசிரியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாக தான் அறியவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
Discussion about this post