யாழ். மாவட்டத்தில் இந்த வருடத்தின் இறுதி வரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளிகள் 2203 பேர் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில், “யாழ். மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலைக்குப் பின்னர் நவம்பர் மாத இறுதி வாரத்தில் இருந்து டெங்குநோயின் பரம்பல் சடுதியாக அதிகரித்து செல்வதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இந்த வருடத்தின் இறுதிவரையான காலப்பகுதியில் 2203 நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன.
செப்டம்பர் மாதத்தில் 110 நோயாளிகளும், அக்டோபர் மாதத்தில் 118 நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 82 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் கூடிய நோயாளர்கள் நல்லூர், யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் அதிகூடிய நோயாளிகள் இனங்காணப்பட்ட நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செப்டம்பர் மாதத்தில் 19 நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில் 23 நோயாளர்களும் நவம்பர் மாதத்தில் 108 நோயாளர்களும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மாத்திரம் 34 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளவான நோயாளர்கள் கொக்குவில், கோண்டாவில், திருநெல்வேலி மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய பிரதேசங்களில் இருந்து இனங்காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயின் பரம்பல் சடுதியாக அதிகரிக்கும் இந்த சூழ்நிலையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post