ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிசாந்த, மிலான் ஜயதிலக்க ஆகியோர் உட்பட 4 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று நேற்று உத்தரவிட்டது.
கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை முன்பாகவும், காலிமுகத்திடலிலும் நடந்த வன்முறைகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நால்வருரையுமே எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், மேல்மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் ஊழியர் ஒருவரும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, நீதிமன்று விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டது.
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சீதாவக்க பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹண கொழும்பிலும், களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன களனியிலும் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த மொரட்டுவ மாநகர சபையின் முதல்வர் சமன்லால் பெர்ணாண்டோவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனக ஹேரத் மற்றும் தாரக பாலசூரிய ஆகியோரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களுக்கு கேகாலை நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியது.
Discussion about this post