இலங்கையில் அரசியல் நெருக்கடி உக்கிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை விரட்டுவதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இரு முனை தாக்குதலை தொடுத்துள்ளது.
கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச நேரில் களமிறங்கி இத்தாக்குதலை வழிநடத்துவது தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று பிற்பகல் சஜித் பிரேமதாச தலைமையில் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் பின்னர், எவரும் எதிர்பாராத வகையில் திடீர் அரசியல் தாக்குதலை ஆரம்பித்தார் சஜித்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை, அவரின் உத்தியோகப்பூர்வ வதிவிடத்துக்கே சென்று சந்தித்தார் சஜித். ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட எம்.பிக்களும் உடன் சென்றிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், அவர் தலைமையிலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்விரு பிரேரணைகளையும் வெகு விரைவில் விவாதத்துக்கு உட்படுத்துமாறு சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசுமீது நம்பிக்கையில்லை என்பதால் அனைத்து எம்.பிக்களும் பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும், இதற்கு தேவையான அழுத்தங்களை மக்கள் பிரயோகிக்க வேண்டும் எனவும் சஜித் அழைப்பு விடுத்தார்.
அதேவேளை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி நாளைய தினமே இவற்றை சபாநாயகர் விவாதத்துக்கு எடுக்கலாம் என எதிரணி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இது விடயம் தொடர்பில் சபாநாயகர், பக்கச்சார்பாக செயற்பட்டால் அவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும், அதன் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டதாக லக்ஷ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் பிரதமர் மஹிந்த வீடு செல்ல நேரிடும். எனினும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் ஜனாதிபதியின் பதவிக்கு எவ்வித அச்சுறுத்தலும் வராது. ஆனால் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை இழந்தவராக அவர் கருதப்படுவார். இது ஜனாதிபதிக்கு உளவியல் ரீதியில் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவும் பார்க்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் நாளை கூடும்போது, விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவாரென தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்துதான் இன்று மாலையே ஐக்கிய மக்கள் சக்தி இவ்விரு பிரேரணைகளையும் முன்வைத்துள்ளன. பிரதமர் பதவி விலகிவிட்டால் அமைச்சரவை தானாக கலைந்துவிடும். அதன்பிறகு நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதில் பயன் இல்லை. இதனால்தான் அரசியல் விளம்பரம் கருதியும் முன்கூட்டியே அவற்றை எதிரணி இன்று கையளித்துள்ளது.
Discussion about this post