மொட்டு கட்சியை பஸில் ராஜபக்ச உருவாக்கவில்லை. மாறாக விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாட்டு மக்கள் இணைந்து கட்டியெழுப்பிய அரசியல் சக்திக்கு அவர் ‘ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன’ என பெயர் போட்டுக்கொண்டார்.
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதாவது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடின உழைப்பால் கரையான் கட்டிய புற்றில், திடீரென கரு நாகம் குடியேறுவதுபோல்தான் மொட்டு கட்சி விடயத்திலும் சம்பவம் அரங்கேறியுள்ளது. எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்ததால் மனம் வருந்துகின்றேன் என கவலை வெளியிட்டுள்ள அவர், புதிய அரசமைப்பு விடயத்தில் தமக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி மீறப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு, இந்த ஆட்சியின்கீழ் புதிய அரசமைப்பு சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
18 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு சர்வாதிகாரியாக மாறியதால்தான் மஹிந்தவுக்கு முன்கூட்டியே வீடு செல்ல வேண்டிவந்தது ,20 ஆவது திருத்தச்சட்டத்தால் இந்த அரசும் இரு வருடங்களில் வீடு சென்றுவிடும் என விஜயதாச ராஜபக்ச ஆருடமும் கூறியுள்ளார்.
Discussion about this post