தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், மே மாதம் 18ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என வௌியான தகவல் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவிடம், இலங்கை விளக்கம் கோரியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று, இலங்கையில் தாக்குதல் நடத்தப்படவுள்ளது இந்திய புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி, தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில், ” 2022 மே மாதம் 18 ஆம் திகதி, இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு, விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதென இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி, கடந்த மே 13 ஆம் திகதி ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி தகவல் தொடர்பில் இலங்கை வினவிய போது, அவை பொதுவான தகவலாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய புலனாய்வுப் பிரிவினர், இலங்கைக்கு அறிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கும் அனைத்து தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, அந்தந்த பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்படும் அதேவேளை பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post