அம்பாறை, பாலமுனையில் உள்ள முள்ளிமலையில் பௌத்த விகாரை அமைக்க எடுக்கப்பட்ட திடீர் முயற்சி பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவோடு, இரவாக அங்கு அத்திபாரம் வெட்டி விகாரை அமைக்க முயற்சிக்கப்பட்டபோது, நேற்றுக் காலை பொதுமக்களும், உள்ளூர் மட்ட அமைப்புக்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
அந்தப் பகுதியில் தமிழ் பேசும் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வரும் நிலையில், பௌத்த பிக்குகள் அடங்கிய குழு ஒன்று அங்கு அத்துமீறி விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு விகாரைக்கான அத்திபாரம் வெட்டப்பட்டு, நேற்றுக்காலை அடிக்கல் நடுவதற்கான ஏற்பாடுகள் அந்தக் குழுவால் முன்னெடுக்கப்பட்டது. இந்தத் தகவலை அறிந்த பிரதேச மக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் சம்பவ இடத்தில் கூடி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளாஹ், கிழக்கு மகாண முன்னால் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் உட்படப் பிரதேச அரசியல்வாதிகள் பலரும் அங்கு சென்று அத்துமீறிய விகாரை அமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலர் ஊடாக அம்பாறை மாவட்டச் செயலரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
பௌத்த பிக்குகள் அடங்கிய குழு மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. பிரதேச மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பை அடுத்து விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் நிறுத்தப்பட்டன. பௌத்த பிக்குகள் அடங்கிய குழு அங்கிருந்து அகன்றது.
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மையான பூமியான முள்ளிக்குளம் மலையடிவாரத்தில் முஸ்லிம் மக்களே அதிகம் வாழ்கின்றனர்.
அவர்களுக்குச் சொந்தமான காணியிலேயே பௌத்த விகாரை அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் விகாரை அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Discussion about this post