ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சமூக பாதுகாப்பு வரிச் சட்டத்துக்கு அமைய வருடாந்தம் 120 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைக் கொண்டவர்கள் தமது திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு காலாண்டுக்கு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான விற்றுமுதல் உள்ளவர்களும் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக சமூகப் பாதுகாப்பு வரியை அறிமுகப்படுத்தினார்.
அந்த வரியை எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு முழுவதும் புதிய வரி நடைமுறைப்படுத்தப்பட்டால் 140 ரூபா பில்லியன் வருமானம் கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
ஆனால் இந்த வரி ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதால், எதிர்பார்க்கப்படும் வரி வருவாயில் நாலிலொரு பங்கை மாத்திரமே ஈட்ட முடியும் என வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post