25 வருடங்களுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரவுசரான இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆண்டோடு இந்தச் சேவையை நிறுத்த மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளது.
கணினிகளில் இணையப் பயன்பாடு ஆரம்பித்த காலத்தில் பயனர்களுக்கு இருந்த ஒரே பிரவுசர் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மட்டுமே. ஆனால், காலப்போக்கில் மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ், சஃபாரி, க்ரோம் போன்ற பிரவுசர்களின் வேகத்தோடு எக்ஸ்ப்ளோரரால் போட்டி போட முடியவில்லை. அதன் பயன்பாடு மிக மிகக் குறைவான விகிதத்திலேயே இருந்து வந்தது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமே எட்ஜ் என்கிற பிரவுசரை 2015ஆம் ஆண்டே அறிமுகம் செய்தது. ஆனால், எக்ஸ்ப்ளோரர் சேவையை நிறுத்துவது குறித்து அறிவிக்கவில்லை.
தற்போது ஜூன் 15, 2022 முதல் எக்ஸ்ப்ளோரர் சேவையை நிறுத்துவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. மேலும், மைக்ரோசாஃப்ட் எட்ஜில் எக்ஸ்ப்ளோரருக்கான எதிர்காலம் இருக்கிறது என்றும் கூறியுள்ளது.
தொடர்ந்து விண்டோஸ் 10 பயன்படுத்துகையில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இருக்கும் என்றாலும் அதற்கான சேவை நிறுத்தப்பட்டுவிடும். மேலும் மைக்ரோசாப்ஃட்டின் இணைய சேவைகளான ஆஃபிஸ் 365, அவுட்லுக், ஒன் ட்ரைவ் ஆகியவையும் இனி எக்ஸ்ப்ளோரரில் வேலை செய்யாது.
இன்னும் சில பழைய இணையதளங்கள் எக்ஸ்ப்ளோரரில் மட்டுமே இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தளங்களை, எட்ஜ் பிரவுசரில், எக்ஸ்ப்ளோரர் மோட் என்கிற அம்சத்தோடு பார்க்க முடியும். இந்தச் சேவை குறைந்தது 2029 வரை தொடரும் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
Discussion about this post