உள்ளக மற்றும் வெளியரங்குகளில் தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம் அதிருப்தி அளிக்கிறது. முகக்கவசம் அணிவது தற்போதைய நிலையில் ஆரோக்கியமானது. அதனால் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு இலங்கை மருத்துவ நிபுணர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுமக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற சுகாதார அதிகாரிகளின் முடிவு கவலை அளித்துள்ளது.
மருத்துவமனை அமைப்புகளில் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமா என்பது தொடர்பாக அமைச்சு எதையும் குறிப்பிடவில்லை.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனும் அரசாங்கத்தின் முடிவு மிகவும் ஆபத்தானது.
தற்போது நாட்டில் நிலவும் ஆரோக்கியமான சுகாதார விதிமுறைகளை மாற்ற வேண்டாம்.
இந்தத் தீர்மானத்தால் தேவையற்ற சுவாச நோய் தொற்றுகளால் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதைத் தவிர்க்க அனைத்து தனிநபர்கள், நிறுவனங்கள் முகக்கவசம் அணியும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றார்.
Discussion about this post