லங்கா சதொச நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 03 வகையான அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
நேற்று முதல் (30.06.2023) வாடிக்கையாளர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பின்வரும் விலைகளில் பொருட்களை வாங்க முடியும் என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, “ஒரு கிலோ வெள்ளை அரிசி 01 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 165 ரூபாவாகும். ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி 01 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை 168 ரூபாவாகும். ஒரு கிலோ சிவப்பு அரிசி 01 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 137 ரூபாவாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், லங்கா சதொச நிறுவனத்துக்கு கடந்த 2021 ஆம் ஆண்டின் டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் 1500 கோடி ரூபா நட்டமும், 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 60 கோடி ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு (கோப் குழு) கூட்டத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அரிசி இறக்குமதியின்போது மாத்திரம் லங்கா சதொச நிறுவனத்துக்கு 600 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோப் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அரிசி மூடைகள் மனித பாவனைக்கு ஏற்புடையதாக இருக்காதவாறு காலாவதியாகியுள்ளது.
இவ்வாறு காலாவதியாதியான அரிசி கால்நடை தீவனத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கோப் குழு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
இதற்கமைய, லங்கா சதொச நிறுவனத்துக்கு பொருத்தமான வர்த்தக மாதிரி ஒன்றை தயாரித்து அதனை இலாபகரமானதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post