எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் பாவனையாளர்களிடம் புரிய வரி ஒன்றை அறவிட இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை அறவிட இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை மின் பயனாளர்களிடம் அறவிடப்படுவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அவற்றின் அடிப்படையில் மின்சார கட்டணத்துக்கு சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியினை அறவிடாமல் விலக்களிக்க வேண்டும் என்று நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வரிக்கு அனைத்து நிறுவனங்களும் உள்வாங்கப்பட்டிருப்பதால் விலக்களிப்பு செய்ய முடியாது என நிதி அமைச்சு பதிலளித்துள்ளது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளனக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால், மின்சாரக் கட்டணத்தை மேலும் 30 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே 75 சதவீத மின் கட்டண அதிகரிப்பை மேற்கொண்டுள்ள நிலையில், மீண்டும் 30 சதவீத மின் கட்டண அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Discussion about this post