மின்கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல் போயுள்ளது என்றும், சுமார் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதிக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் மின்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண அதிகரிப்பால் வரம்பற்ற நட்டம் ஏற்படுவதால் பல நிறுவனங்கள் மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் வேலை இழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
விடுதிகள், உணவகங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பிரதான இடங்களாகும் என இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரியந்த திலகரத்ன தெரிவித்தார்.
அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நாடு முழுவதும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் இடங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, விடுதிகளை நடத்துவதற்கான மின்சார கட்டணத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இலங்கை விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சூரியசக்தி (சோலார்) திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதற்கு தேவையான இடம் கொடுக்க தயார் என்று சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். தற்போது நிலவும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளன என்று கூறப்படுகின்றது.
Discussion about this post