மின்சாரத்திருத்த சட்ட வரைபின் இரண்டாம் வாசிப்பு 84 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்ட வரைவுக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பில் 13 பேர் கலந்துகொள்ளவில்லை.
இந்த சட்ட வரைவு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவால் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
சட்டவரைவு மீதான விவாதம் நேற்று நாள் முழுவதும் இடம்பெற்ற நிலையில் இறுதியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல திருத்த சட்ட வரைவை நிறைவேற்ற வாக்கெடுப்பை கோரினார்.
அதையடுத்து நடந்த இலத்திரனியல் வாக்கெடுப்பில் மின்சார திருத்த சட்ட வரைவுக்கு ஆதரவாக அரசுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்த நிலையில்,அதற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி,ஜே .வி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்களித்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவை வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
அதேவேளை மின்சாரத்திருத்தச் சட்ட வரைவில் சில திருத்தங்களை எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முன்வைத்தபோதும் அவற்றை அரசாங்கம் நிராகரித்தது.
Discussion about this post