நாளை(27) மாவீரர் தினம். தமிழர்கள் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழவேண்டும். அவர்களுக்கு தனிநாடு ஒன்று வேண்டும் என தம்மையே ஆகுதியாக்கிய வீரப்புதல்வர்களை கண்ணீரோடு நினைவு கூரும் திருநாள்.
ஆயிரம் ஆயிரம் புதல்வர்கள் சொந்த பந்தம்,சொத்து சுகம் அத்தனையையும் துறந்து இலட்சியம் ஒன்றுக்காக வீழ்ந்தனர்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டபோதிலும் இன்று 14 வருடங்கள் கடந்தும் தமிழ் மக்கள் அவர்களை நினைவு கூருகின்றார்கள் என்றால் தமிழரின் நெஞ்சங்களில் அவர்களின் தியாகம் எவ்வளவு போற்றுதற்குரியது என்பதை ஆட்சியாளர்களால் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதே பிரதானமான கேள்வி..
தமிழ் மக்கள் ஒருவருக்கும் எவ்வித இடையூறையும் விளைவிக்காமல் தமது புதல்வர்களை நினைவு கூரும் அந்த திருநாளில் தமது அரச இயந்திரமான காவல்துறையை ஏவி நீதிமன்றங்களில் தடை உத்தரவு போட முயல்கிறது ஆட்சிபீடம்.
ஆனால் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கும் நினைவு கூரும் உரிமைக்கும் மதிப்பளித்து அந்த தடைகளை தகர்த்து மக்களுக்கு நினைவு கூரும் வழியை ஏற்படுத்தியுள்ளது நீதித்துறை.
இருந்த போதிலும் மக்கள் தமது புதல்வர்கள் புதைக்கப்பட்டஇடங்களை துப்பரவாக்கி நினைவு நாளை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்கின்றபோது நீதிமன்றால் பெறப்படமுடியாத தடையை அச்சுறுத்தும் பாணியில் நடவடிக்கையை தொடர்கிறது ஆட்சிபீடம்.
துயிலுமில்லங்களை தகர்த்து, மாவீரர் பெற்றோர் கௌரவிப்பை தடுத்தி நிறுத்தி அதனை ஏற்பாடு செய்தவர்களை கைது செய்து என பலவழிகளில் நெருக்குவாரங்கள் கொடுக்கப்படுகிறது.
வருடாந்தம் நிகழும் இந்த நிகழ்விற்கு ஏன் இப்படி நெருக்குதல்களை கொடுக்கிறது ஆட்சிபீடம். அப்படியென்றால் தமிழ் மக்களை இன்னும் சந்தேக கண்கொண்டு தானா பார்க்கிறது சிங்கள அரசு.
யுத்தகாலத்தில் கைதுகள் காணாமற்போகச் செய்தமை, வீதி வீதியாக தமிழ் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை என தொடர்ந்த அராஜகம் தற்போது சட்ட நடவடிக்கை என்ற பெயரில் தொடர்கிறது.
என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ள அந்த வீரப்புதல்வர்களின் நினைவுகளை எவராலும் அழிக்க முடியாது என்பதுவே உண்மை.
Discussion about this post