கண்டி பகுதியில் 15 வயதுடைய மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் பேராதனை – இஹல முருதலாவ பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதான குடும்பஸ்தர் ஒருவரையே கண்டி சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிரதேசவாசிகளையும் அச்சுறுத்தி மாணவர்களை பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
15 வயதுடைய சிறுமி பேராதனைப் பொலிஸில் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்த போதிலும், இது தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காத பொலிஸார் சந்தேக நபரை எச்சரித்து விடுவித்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக கூறப்படும் 5 பாடசாலை மாணவிகளும் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் உள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.சந்தேகநபர் பாடசாலை மாணவியையும் 5 மாணவர்களையும் பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
இரு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர் மற்றுமொரு சிறுவனை அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டபோது கையை கடித்து விட்டு சிறுவன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.சிவில் உடையில் வந்த பொலிஸ் குழுவினர் கிரிபத்கும்புர பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி மற்றும் 5 மாணவர்களை கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்து அறிக்கை பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சட்ட வைத்தியரிடம் பரிந்துரைக்கப்பட்ட சந்தேகநபர் இன்று (02) கண்டி மேலதிக நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post