ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ச தான் ஒருபோதும் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் .
அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஒருபோதும் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்றும், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கத் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும்கட்சியின் பிரதம கொறடாவும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோது, மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று தெரிவித்தார் எனவும், இது தொடர்பாக இன்று அல்லது நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ச நேற்று தனது பதவியில் இருந்து விலகுவது தொடர்பான அறிவித்தலை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. மஹிந்த ராஜபக்சவும் அந்த முடிவில் இருந்தார் என்றும் ஆயினும் அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும் எதிராக எதிர்க்கட்சி நேற்றுமுன்தினம் மாலை நம்பிக்கையில்லா பிரேரணையைச் சமர்ப்பித்த பின்னரே அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
Discussion about this post