பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலக வேண்டும் என்ற குரல்கள் வலுக்கும் நிலையில், மஹிந்த ராஜபக்சவின் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான இறுதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரதமராக மஹிந்த ராஜபக்சவே தொடர வேண்டும் என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துக்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அவசர அவசரமாக மஹிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை முன்னேடுத்துள்ளனர்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மஹிந்த ராஜபக்சவை இன்று சந்திக்க முயன்றபோதும், சந்திக்க மறுத்த மஹிந்த ராஜபக்ச தனது தங்காலை இல்லத்துக்குச் சென்றுள்ளார் என்று அறிய முடிகின்றது.
இதுவரை மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ள நிலையில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் தேவையாகவுள்ளது.
113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துக்களை நாளை மாலைக்குள் சேகரித்து, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையளிக்காவிட்டால் எதுவும் நடக்கலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
Discussion about this post