இறக்குமதி செய்யப்படும் சில மருந்துகளின் விலை முந்நூறு முதல் நானூறு வீதம் அதிகரித்துள்ளதால் மருந்துகளுக்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்தன கங்கந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
விலை சூத்திரத்தை விதிப்பது மருந்து அதிகார சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக சுகாதார அமைச்சர் மருந்துகள் அதிகாரசபை அதிகாரிகளை சந்தித்து வேண்டுகோள் விடுத்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் கங்கந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது சுமார் ஆயிரத்து 200 வகையான மருந்துகள் உள்ளன. ஆனால் 100 மருந்துகளுக்கு மட்டுமே விலைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மருந்துப் பொருள்களின் விலையை 29 வீதம் மற்றும் 40 வீதத்தால் இரண்டு தடவைகள் அதிகரிக்க அரசாங்கம் அனுமதித்ததையடுத்து மருந்துகளின் விலை 81 வீதத்தால் அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துகளின் விலை 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளது.
இறக்குமதியாளர், மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் ஆகிய மூன்று தரப்பினரின் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மருந்து விலை தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் இறக்குமதியாளர் மருந்தின் விலையை அதிகரிக்கின்றனர் என்றார்.
Discussion about this post