மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பட்டதாரி பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நீதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரியராஜ் சிந்துஜா என்ற பெண் கடந்த மாதம் 28ஆம் திகதி உயிரிழந்தார்.
அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான குறித்த பெண், குருதி போக்கு காரணமாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
எவ்வாறாயினும் அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை எனவும் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம், இந்த விடயத்துடன் தொடர்புடைய தரப்பினரைப் பாதுகாக்கும் வகையில் விசாரணைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
வழமையான மருத்துவ தவறுகள் போன்று இந்த சம்பவத்தை மாற்றுவதற்கு முனைவதாகவும் தவறிழைத்தவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post