இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் சற்று முன்னர் அதிகாரபூர்வமாக முடிசூடியுள்ளார். எலிசபெத் அரசியார் காலமான 8 மாதங்களுக்குப் பிறகு முடிசூட்டு விழா இடம்பெறுகிறது. பிரிட்டன் முழுவதும் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து (Westminster Abbey) முடிசூட்டு விழா இடம்பெற்றது.
70 ஆண்டுகளில் முதன்முறை பிரிட்டிஷ் அரசர் முடிசூட்டு விழா நடக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னர் சார்லஸ் இன் முடிசூட்டு நிகழ்வை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் கண்டு ரசிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முடிசூட்டு விழாவுக்கு 63 மில்லியன் டாலர் செலவாகும் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. பிரிட்டன் நேரப்படி முற்பகல் 11 மணிக்கு முடிசூட்டு நிகழ்வு ஆரம்பமானநிலையில் சற்று முன்னர் அவர் மன்னராக மகுடம் சூடியுள்ளார்.
மன்னர் சார்லஸின் முடிசூட்டு நிகழ்வில் உலகின் சிறந்த ஆபரணங்கள், பழைமையான பொருள்களைக் காண ஓர் அரிய வாய்ப்புக் கிடைக்கும். அவை முடிசூட்டு விழாவின்போது மட்டுமே பயன்படுத்தப்படுபவை.
மன்னரின் மகுடம் (St Edward’s Crown)
முடிசூட்டு ஆபரணங்களில் முதன்மையானது; அது மன்னர் சார்ல்ஸின் சிரத்தில் சூட்டப்படும். மகுடம் இதற்கு முன் 1953ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் அவருக்குச் சூட்டப்பட்டது.
தங்கத்தால் ஆன அந்த மகுடத்தில், உலகின் ஆக விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதன் எடை சுமார் 2 கிலோகிராம்.
அரச மகுடம் (Imperial State Crown)
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கின்போது காணப்பட்ட இந்த மகுடமும் மன்னருக்கு அணிவிக்கப்படும். இதன் எடை 1.06 கிலோகிராம். இதில் 2,868 வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அது தவிர முத்து, மரகதம், நீலக்கல் ஆகியவையும் பதிக்கப்பட்ட மகுடம் இது.
2,200 வைரக் கற்கள் கொண்ட ராணியின் மகுடம் ராணியாக முடிசூட்டிக்கொள்ளவிருக்கும் கமிலாவுக்கு ராணி மேரியின் மகுடம் சூட்டப்படும். அதில் 2,200 வைரக் கற்கள் இருக்கும்.
குதிரை வண்டிகள்
மன்னர் சார்ல்ஸும் கமிலாவும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்குச் (Westminster Abbey) செல்ல ஒரு குதிரை வண்டியையும் திரும்புவதற்கு மற்றொரு வண்டியையும் பயன்படுத்துவர். திரும்பும் வண்டி பாரம்பரிய தங்க முலாம் பூசப்பட்டது.
1762ஆம் ஆண்டு மன்னர்களையும் அரசிகளையும் அழைத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டது.
செங்கோல்
நிகழ்வில் பல செங்கோல்களைக் காணமுடியும். ஆனால் சிலுவையுடன் கூடிய தங்கச் செங்கோல் மன்னரின் நல்லாட்சியையும் அதிகாரத்தையும் குறிக்கும்.
உலகின் ஆகப் பெரிய நிறமற்ற வைரம் செங்கோலின் உச்சியில் பதிக்கப்பட்டிருக்கும்.
வேல்ஸின் சிலுவை
நிகழ்வில் வெள்ளியாலான ஒரு சிலுவையையும் காணமுடியும். ஏசுநாதர் அறையப்பட்ட சிலுவையிலிருந்து விழுந்த சில்லுகள் என்று வத்திகன் (Vatican) கூறும் இரு சிறு பொருள்கள் பிரிட்டனுக்குப் பரிசளிக்கப்பட்டன.
போப் பிரான்சிஸ் அளித்த அந்த இரு துண்டுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிலுவையை நிகழ்வில் காணலாம்.
அரியணை
1300ஆம் ஆண்டு முதலாம் எட்வர்ட் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட 2 மீட்டர் உயரம் கொண்ட அரியணையில் மன்னர் அமர்வார்.
அது பிரிட்டனின் ஆகப் பழமையான அரியணை என கூறப்படுகின்றது.
Discussion about this post