ஒஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக் தனது மனைவியை கேலி செய்தமைக்காக மேடைக்குச் சென்ற வில் ஸ்மித், கிறிஸ் ராக் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஒஸ்கர் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் தட்டிச் சென்றார்.
விழாவைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், சிறந்த ஆவணப்படத்திற்கான பரிசை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது கிண்டலான தொனியில் வில் ஸ்மித் மனைவி பற்றி பேசத் துவங்கினார். அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் இறுக்கமாக செதுக்கப்பட்ட முடியை “ஜி.ஐ. ஜேன்” படத்தில் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு ஒரு நகைச்சுவையை கூறினார்.
உடனே தனது இருக்கையை விட்டு எழுந்து மேடைக்கு சென்றார் வில் ஸ்மித். யாருமே எதிர்பார்க்காத வகையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
ஸ்மித் அறைந்ததும் அரங்கம் முழுவதும் அமைதி மற்றும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் ஸ்மித் அமைதியாக தனது இருக்கைக்குத் திரும்பினார். பின்னர் உரத்த குரலில் “என் மனைவியின் பெயரை உங்கள் வாயில் இருந்து உச்சரிக்காதீர்கள்” என்று கத்தினார். இந்த சம்பவம் வீடியோவாக சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அலோபீசியா என்பது திட்டு திட்டாக முடி உதிரும் நோய். தன் காதல் மனைவியிடம் உள்ள உடல்நலக் குறைவை நகைச்சுவையாக்கியதால் ஸ்மித் கோபம் கொண்டு அறைந்திருப்பார் என கூறப்படுகிறது.
Discussion about this post