தனது எதிர்கால மனைவியை பார்ப்பதற்காக மாப்பிள்ளை, தனது உறவினர்களுடன் அவரின் வீட்டுக்கு வந்தபோது , மணப்பெண் தனது நண்பிகளுடன் காலிமுகத்திடல் போராட்டக் களத்துக்கு சென்றிருந்த சம்பவமொன்று பேராதனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாப்பிள்ளை மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர். பெண் பேராதனையைச் சேர்ந்தவர். தரகர் ஒருவர் மூலம் வந்த இந்த பெண்ணைப் பார்க்க, மாப்பிள்ளை தனது உறவினர்களுடன் மணமகள் வீட்டுக்கு பெண் பார்க்க வந்துள்ளார்.
மணமகள் வீட்டில் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது. இரண்டு குடும்பத்தினரும் பரஸ்பரம் தங்களைப் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டனர். இருந்தும் மணமகள் வீட்டில் இருக்கவில்லை.
தேநீர் விருந்துபசாரத்துக்கு பின்னர் பெண் எங்கே என்று கேட்டபோது அவர் நகரிலுள்ள அழகுநிலையம் சென்றுள்ளதாகவும் , விரைவில் வந்துவிடுவார் என்றும் பெண் வீட்டார் தெரிவித்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்தும் பெண் வராததால் அவரது கைத்தொலைபேசிக்கு தொடர்புகொண்டபோது தொடர்பு கிடைக்கவில்லை. பின்னர் அவரது நண்பியின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டோது அவர்கள் கொழும்பு காலிமுகத்திடல் “கோட்டாகோகம”யில் இருப்பது தெரியவந்தது.
நண்பியின் தொலைபேசியில் பெற்றோருடன் பேசிய பெண் “நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும்போது எனது எதிர்காலம் குறித்து சிந்திக்க நேரமில்லை” என்று தெரிவித்த அந்தப்பெண் தானும் போராட்டத்தில் இணைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலைமையை அறிந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் வீடு திரும்பியதும் மீண்டும் வருவதாகத் தெரிவித்து திரும்பிச்சென்றனர்.
Discussion about this post