அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று வெளியான தகவல்களை அடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளது.
கொழும்பு, காலி முகத் திடலில் சில தினங்களுக்கு முன்னர் பெரும் எண்ணிக்கையான பொலிஸ் வாகனங்கள் கொண்டுவரப்பட்டுப் பின்னர் அவை அகற்றப்பட்டிருந்த நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பிரஜைகள் அமைதியாக ஒன்றுகூடுவதை சட்டவிரோத முறைமைகள் ஊடாக தடுக்க முயற்சிப்பது அடிப்படை உரிமை மீறல் என்று அரசாங்கத்துக்குச் சுட்டிக்காட்டியிருந்தது.
இராணுவத்தின் குழுவொன்றை போராட்டக்காரர்களைப் போன்று கொழும்பு, காலிமுகத் திடலுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும், அதன்பின்னணியில் பெரும் சதி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
கணேமுல்ல இராணுவ முகாமில் இராணுவ குழுவொன்றுக்கு போராட்ட களத்தில் பயன்படுத்தப்படும் ஆர்ப்பாட்ட கோஷங்களை கூறிப் பயிற்றுவிப்பதை வெளிப்படுத்தும் காணொலியொன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.
அதையடுத்து நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் பொலிஸாரால் அழைக்கப்பட்டால் மாத்திரமே அவர்களுக்கான ஒத்துழைப்ழப வழங்குவதற்கு இராணுவம் நடவடிக்கை எடுக்கும் எனவும் மாறாக தற்போது பல்வேறு குழுக்களால் குறிப்பிடப்படுவதைப் போன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் வகையில் இராணுவத்தினர் செயற்படவில்லை என்றும் இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் மட்டக் குழுவொன்று கம்பஹா, கணேமுல்ல – கடவத்த வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post